மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை பிட்காயின் வர்த்தகத்தில் இழந்த வியாபாரி

மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை பிட்காயின் வர்த்தகத்தில் இழந்த வியாபாரி, அந்த பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Update: 2021-11-23 12:15 GMT
கோப்பு படம்
மும்பை, 

மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை பிட்காயின் வர்த்தகத்தில் இழந்த வியாபாரி, அந்த பணம் கொள்ளை போனதாக  நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

கொள்ளை நாடகம்

பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் சுமந்த் லிங்காயத். மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் வசாய் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தான் தனியாக சென்று கொண்டு இருந்த போது மர்மநபர்கள் தன்னிடம் இருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் கொள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வியாபாரி கூறிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பணம் கொள்ளை போனதாக அவர் நாடகமாடியது தெரியவந்தது.

குடும்பத்தினரை சமாளிக்க...

இதுதொடர்பான அதிர்ச்சி தகவலை வியாபாரி சுமந்த் லிங்காயத் வெளியிட்டார். அவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அவர் ரூ.10 லட்சம் சேர்த்து வைத்து உள்ளார். இந்தநிலையில் அதிக லாபம் கிடைக்கும் என நினைத்து அவர் அந்த பணத்தை பிட்காயின் வர்த்தகத்தில் முதலீடு செய்து இருக்கிறார். ஆனால் பிட்காயின் வர்த்தகத்தில் ரூ.10 லட்சத்தையும் இழந்து உள்ளார். இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தவியாய் தவித்தார். குடும்பத்தினரை சமாளிப்பதற்காக கொள்ளை நாடகமாடியதாக போலீசாரிடம் தெரிவித்தார். 

இதையடுத்து பொய் புகார் அளித்த வியாபாரியை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் பிட்காயின் வர்த்தகத்தில் பறிபோன சம்பவம், பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  
-----------------

மேலும் செய்திகள்