மைனர் பெண்ணை திருமணம் செய்து புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

மைனர் பெண்ணை திருமணம் செய்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-23 19:20 GMT
சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், 18 வயது பூர்த்தியாகாத மைனர் பெண்ணை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுரேஷ் மீது குன்னம் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான சுரேஷ், பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். சுரேஷ் சிறையில் இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானது.

அதையடுத்து, தனது மனைவி சட்டவிரோத காவலில் உள்ளார், அவரை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சுரேஷ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

திரும்பப்பெற மறுப்பு

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி மனுதாரர் அறிவுறுத்தப்பட்டார்.

ஆனால் தன் மனைவியை தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் என்றும், மனுவை திரும்பப்பெற முடியாது எனவும் சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முகநூலில் வெளியிட்டார்

அதன்பின்னர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி அந்தப் பெண், கணவன் மற்றும் தாயாருடன் ஆஜரானார். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலும், பெற்றோரின் சம்மதத்துடனும் திருமணம் செய்துகொண்டதாகவும், மனுதாரர் சுரேஷ் ஏற்கனவே 2 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரது நடத்தை சரியில்லாததால் அவரை விட்டுப் பிரிந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

அப்போது, தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சுரேஷ் முகநூலில் வெளியிட்டுள்ளதாக நீதிபதியிடம் அந்த பெண்ணின் தாய் தரப்பில் கூறப்பட்டது.

அபராதம்

இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் சுரேசுக்கு ரூ.75 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தனர். அந்த தொகையை 8 வாரத்தில் பெண்ணின் தாயாருக்கு கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்