பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் நகை பணம் கொள்ளை

புதுச்சேரியில் பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் நகைகள், ரூ.2¼ லட்சம் பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-24 19:57 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில் பால் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் நகைகள், ரூ.2¼ லட்சம் பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பால் வியாபாரி

புதுவை ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிளமெண்ட் (வயது 48). பால் வியாபாரி. இவரது மனைவி ஜாக்குலின். இவர்களது மூத்த மகள் ஜான்சிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களில் அவரது கணவர் மட்டும் பணி நிமித்தம் பிரான்சுக்கு புறப்பட்டு சென்றார். 
இந்தநிலையில் ஜான்சியும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டார். இதனால் திருமணத்திற்காக அவருக்கு வழங்கிய சீர்வரிசை மற்றும் நகைகளை தனது தாயாரின் பொறுப்பில் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். 
அதைத்தொடர்ந்து ஜான்சியை பிரான்சுக்கு வழிஅனுப்பி வைக்க அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு மகளை விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு வீடு திரும்பினர்.

34 பவுன் நகை, பணம் கொள்ளை

அப்போது கிளமெண்ட் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கிளமெண்ட் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து       தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

தொடரும் சம்பவம்

ரெட்டியார்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வீட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில்     ரெட்டியார் பாளையம் ஜெயா நகரில் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை     ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்