மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் புகார் தெரிவிக்கலாம்

மனிதர்கள் மூலம் கழிவுநீரை அகற்றினால் புகார் தெரிவிக்கலாம் என்று தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தலைவர் மா.வெங்கடேசன் சென்னையில் கூறினார்.

Update: 2021-11-29 22:13 GMT
சென்னை,

சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் களப்பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயகுமார் தலைமை தாங்கினார்.

தேசிய துப்புரவு பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு பருவக் கடனாக ரூ.40 லட்சத்து 56 ஆயிரத்து 300-க்கான காசோலையை தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

களப்பணியாளர்கள் நலனில் அக்கறை

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய களப்பணியாளர்களின் மறுவாழ்வு நலன் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் சென்னை குடிநீர் வாரியம் உரிய இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து களப்பணியாளர்களையும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் நிலையை சென்னை குடிநீர் வாரியம் உறுதி செய்து களப்பணியாளர்களின் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும். உரிய கால இடைவெளியில் களப்பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக உயர் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிவுநீர் அகற்ற...

கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி யாராவது மனிதர்களை கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் தேசிய உதவி எண் 14420-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்