முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த கோரிக்கை: மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-01 23:08 GMT
சென்னை,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்தக்கோரி இந்தியா முழுவதும் முதல் மற்றும் 2-ம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு பணிகளை புறக்கணித்து சுமார் 2 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:-

மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பர் மாதம்தான் நீட் தேர்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் நலித்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

அதனால், 3 மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. நீட் தேர்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர். கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 500 பேர் உள்பட இந்தியா முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பார்கள்.

பணிச்சுமை-மன உளைச்சல்

முதுநிலை மாணவர்கள், மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கனவே 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பணிச்சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளன. எனவே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்