அண்ணா பல்கலைக்கழகம் ரூ.30 கோடி ஜி.எஸ்.டி. ஏய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகங்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2021-12-02 23:58 GMT
சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனம். அதேபோல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகமும் அரசின் அனைத்து மருத்துவ கல்லூரிகள் செயல்படுவதற்கான பாடத்திட்டங்களையும் அதற்கான வழிகாட்டு நடைமுறைகளையும் வழங்கி வருகிறது.

ஆனால், இந்த 2 பல்கலைக்கழகங்களும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தியது முதல் இதுவரை வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ரூ.50 கோடி

கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழகம் வழங்கும் சேவைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் செலுத்த வேண்டும். ஆனால் கல்லூரிகளிடமிருந்து பெறும் வரியை, அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் செலுத்த வேண்டும். ஆனால், 2 பல்கலைக்கழகமும், பொது ஜி.எஸ்.டி. பதிவு எண் இதுவரை ஏதும் வாங்காமல் கணக்கு விவரங்களை பராமரித்து வருகின்றன.

விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் ரூ.30 கோடியும், மருத்துவ பல்கலைக்கழகம் ரூ.20 கோடி என மொத்தம் ரூ.50 கோடி வரை வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளன.

அபராதம் விதிக்கப்படும்

இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் இதுவரை வரியை முறையாக செலுத்தவில்லை. அவ்வாறு செலுத்தவில்லை எனில் வரி ஏய்ப்புக்கு நிகரான அபராதம் விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இந்த தொகையை செலுத்த அறிவுறுத்தி 3 மாதங்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் வரியை செலுத்த முன்வரவில்லை. இதர பல்கலைக்கழகங்கள் அனைத்தும் முறையாக வரி செலுத்துகின்றன.

மேற்கண்ட தகவல்களை ஜி.எஸ்.டி. உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்