மாநில பொருளாதார வளர்ச்சி கடவுளின் சொத்துகள் மூலம் இருக்கக்கூடாது ஐகோர்ட்டு கருத்து

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டுக்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுளின் சொத்துகள் மூலமாக இருக்கக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2021-12-05 18:56 GMT
சென்னை,

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையில் இடம் வாங்கி வீடுகளை கட்டியது. அந்த வீடுகளுக்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் 22 சென்ட் நிலம், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் உள்ள நித்தியகல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து, குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் குத்தகையை நீட்டிக்க கோவில் நிர்வாகம் மறுத்தது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

மாத வாடகை

அதன்படி நிலத்தின் குத்தகையை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்த இந்து சமய அறநிலையத்துறை, வெறும் 400 சதுர அடி நிலத்தை மாதம் ரூ.7 ஆயிரத்துக்கு வாடகைக்கு வழங்க கடந்த 2017-ம் ஆண்டு முன்வந்தது. இந்த நிலம் போதாது என்பதால் அந்த கட்டுமான நிறுவனம் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோவில் நிலம் தற்போது பயன்படுத்தப்படாமல் தரிசாக கிடந்தாலும், எதிர்காலத்தில் அந்த நிலம் எதற்கும் பயன்படாது என்று கூற முடியாது.

பரிசீலனை

தற்போது 22 சென்ட் நிலத்தை மனுதாரருக்கு இந்து சமய அறநிலையத்துறை குத்தகைக்கு கொடுக்க கோவில் நிர்வாகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், சாலையில் இருந்து வீட்டுக்குள் செல்ல அங்கு குடியிருப்போருக்கு இந்த நிலம் அவசியம் தேவை.

எனவே, நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது குறித்து மனுதாரர் இந்து சமய அறநிலையத்துறையிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அவரது கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கு அறநிலையத்துறை கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்து அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டு பரிசீலித்து தகுந்த முடிவை தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும்.

கடவுள் சொத்து

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டுக்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் வருமானம் முக்கியமானதாக இருந்தாலும்கூட, அந்த வருமானம் கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக்கூடாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்