கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெறுவது எப்படி?

கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெறுவது எப்படி? தமிழக அரசு தகவல்.

Update: 2021-12-07 18:52 GMT
சென்னை,

கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பெறுவது எப்படி? என்பது குறித்து தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

ரூ.50 ஆயிரம் நிதியுதவி

மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிகளை வழங்குவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது. மேலும், கொரோனாவினால் உயிரிழப்பு நேரிடும்போது அந்த குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தால், அது கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

கொரோனா தொற்றினால் குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்த நிலையில், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் (முன்கள பணியாளர்கள்) பெற்றவர்கள்; இரண்டு பெற்றோரையும் இழந்து ரூ.5 லட்சம் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து ரூ.3 லட்சம் பெற்ற குழந்தைகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது.

மேற்கண்ட அறிவிப்பின்படி, தமிழக அரசு சார்பில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது.

பெறுவது எப்படி?

இந்த நிலையில், இந்த ரூ.50 ஆயிரம் நிதியுதவியை பெறுவது எப்படி? என்று தமிழக அரசு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித்தொகை பெறலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்