சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-08 00:01 GMT
சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்படுகின்றன. இதனால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்கக்கோரி அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேதனை அளிக்கிறது

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் உள்ள தத்துவஞானிகள், கவிஞர்கள் என்று அனைவரும், மனிதகுலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் உலாவுகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், இங்கு இறந்த உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய இதுபோல வழக்கு தொடரப்படுவது வேதனை அளிக்கிறது. சாதி பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒற்றுமை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

அதுமட்டுமல்ல, இதுபோன்ற விவகாரத்தில் பொருளாதார நிலையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இறந்தவனுக்கு சொந்த நிலம் உள்ளதா, சொந்த நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறதா என்றெல்லாம் கணக்கிடப்படுகிறது.

நிலை மாற வேண்டும்

ஆனால் காலம்காலமாக எஸ்.சி., அருந்ததியர் உள்ளிட்ட சாதியினருக்கு உடலை அடக்கம் செய்ய சொந்த நிலம் இல்லை. இவர்கள் இறந்தால், உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலம் வழியாக உடலைக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை.

இந்த வழக்கிலும் அருந்ததியினருக்கு மயானம் இல்லை என்று முறையிடப்படுகிறது. அதனால், சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும். தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானத்தை உருவாக்க வேண்டும். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சாதியினருக்கும் பொது மயானங்களை பயன்படுத்த உரிமை உள்ளது.

மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறேன்.

ஊக்குவிப்பு

பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி அதன் மூலம் இதுபோன்ற பொது மயான முறையை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் மடூர் கிராமத்தில் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொது வான மயானத்தை அமைக்க உரிய இடத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்