கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-12-08 23:04 GMT
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் 27,31,945 நபர்கள் பாதிக்கப்பட்டு, 26,87,414 நபர்கள் குணமடைந்துள்ளனர், 36,549 நபர்கள் கொரோனா நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் (2021-2022) கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு முனைப்பான முயற்சிகளால் நோய் தோற்று 710 ஆக குறைந்துள்ளது. பெருமளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி தமிழ்நாட்டில் சுமார் 7 கோடி தடுப்பூசிகள் செலுத்தியுள்ள காரணத்தால் கொரோனா நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தற்போது அண்டை மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களது குடும்பங்களின் துயர் துடைக்கும் வகையில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்த நபர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.182.74 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்-வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அறிவுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களது குடும்பத்தினர் கொரோனா நோய்த் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்று வைத்திருப்பின் இணையவழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா நிவாரணம் கோரி வரப்பெறும் விண்ணங்களை பரிசீலனை செய்து தகுதியுள்ள இனங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழறிஞர்களுக்கு உரிமை தொகை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் அறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், தொ. பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் செ. ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூல் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழறிஞர் புலவர் செ.ராசுவின் மருத்துவச் செலவிற்கு உதவிடும் வகையில் அவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டமைக்கு ரூபாய் 15 லட்சமும் மற்றும் மறைந்த தமிழறிஞர்களான சிலம்பொலி சு. செல்லப்பன், தொ. பரமசிவன் மற்றும் இளங்குமரனார் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 லட்சம் ரூபாய், தமிழறிஞர்கள் முருகேச பாகவதர் மற்றும் சங்கரவள்ளி நாயகம் ஆகியோரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 80 லட்சம் ரூபாய் நூல் உரிமைத்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் செய்திகள்