சுற்றுச்சாலை அமைப்பதற்காக ஆரோவில் பகுதியில் மரங்களை வெட்ட தடை

சுற்றுச்சாலை அமைப்பதற்காக ஆரோவில் பகுதியில் மரங்களை வெட்ட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

Update: 2021-12-10 18:55 GMT
சென்னை,

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் ஆரோவில் நிர்வாகம் உரிய அனுமதி இல்லாமல் சில கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது இங்கு கிரவுண் ரோடு என்ற பெயரில் சுற்றுச்சாலை ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக வனப்பகுதி என கருதப்படும் பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. உரிய அனுமதி பெறாமல் மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், ஆரோவில் நிர்வாகம் மரங்களை வெட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இதுதொடர்பாக ஆரோவில் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்