கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு

தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.

Update: 2021-12-12 22:56 GMT
சென்னை,

தமிழக அரசை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை கண்டிக்கும் வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பில் மவுன போராட்டம் நடந்தது.

பிரிவின் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடந்த இந்த மவுன அறப்போராட்டத்தில் பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.

மாநில முழுவதும்

போராட்டம் குறித்து நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இது முதற்கட்ட போராட்டம் தான். தமிழக அரசும், காவல்துறையும் இதுபோல ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்களை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றார்.

இதுபோல தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் நேற்று பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.

கிண்டி ராஜ்பவனில் நடந்த இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சரஸ்வதி எம்.எல்.ஏ., சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க.வினர் மற்றும் வலைத்தளங்களில் நியாயமாக கருத்து பதிவு செய்பவர்களை தமிழக அரசு வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணாமலை எடுத்துரைத்தார். மேலும் இது தொடர்பான மனுவையும் அளித்தார்.

மேலும் செய்திகள்