அ.தி.மு.க-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2021-12-17 07:14 GMT
சேலம்,

கடந்த 15 ஆம் தேதி அ.தி.மு.க.  அலுவலகத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய எடப்பாடி கே பழனிசாமி ," தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 7 மாதங்களில் 6 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் அதற்கு எதிராக தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும்  தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தேனியில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  அ.தி.மு.க.-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :-

சேலம் என்று சொன்னால் அது அ.தி.மு.க கோட்டை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்திலும் சரி , புரட்சி தலைவி  அம்மா அவர்களின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டை. அ.தி.மு.க-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது. 

தி.மு.க அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில், வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது  தொடர்பாக அ.தி.மு.க பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை . அவர்களுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது  போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .2500 வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்