அரக்கோணம் அருகே துப்பாக்கியால் சுட்டு 25 பவுன் நகை-பணம் துணிகர கொள்ளை

அரக்கோணம் அருகே அதிரடியாக வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் ெபண்கள் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-12-18 20:48 GMT
கதவை தட்டும் சத்தம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கரன் (வயது 24). இவர், கிராமத்துக்கு வெளிேய தங்களுக்கு சொந்தமான வயல் பகுதியில் வீடு கட்டி தாய் சுதா (52), பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு கடந்தசில மாதங்களாக உறவினர்கள் வந்து சென்ற வண்ணமாக இருந்தனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. யாரேனும் உறவினர்கள் வந்திருப்பார்கள் என நினைத்து புஷ்கரன் கதவை திறந்தபோது, வாசலில் முகமூடி அணிந்த மர்மநபர்கள் 3 ேபர் நின்றதை பார்த்து, அதிர்ச்சியில் திறந்த வேகத்தில் கதவை மூடினார். ஆனால் உள்தாழ்ப்பாள் போடவில்லை.

துப்பாக்கியால் சுட்ட முகமூடி நபர்கள்

அப்போது மர்ம நபரில் ஒருவன் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ஜன்னல் வழியாக புஷ்கரனை நோக்கி குறிப்பார்த்து சுட்டான். அதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் புஷ்கரன் அலறியடித்தபடி ஒரு அறையில் போய் சுருண்டு விழுந்தார். உடனே மர்மநபர்கள் 3 பேர் அதிரடியாக கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

துப்பாக்கி வெடித்த சத்தத்தைக் கேட்டதும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து ஹாலுக்கு ஓடிவந்தனர். அப்போது அவர்களையும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர்கள் கூச்சலிட்டு அலறினர்.

நகை-பணம் கொள்ளை

மர்மநபர்கள், சத்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டினர். அத்துடன் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களையும் எடுத்தனர். உடனே அவர்கள் மரணபயத்தில் அழாமலும், கூச்சலிடாமலும் அமைதியாகினர்.

மர்மநபர்கள், அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டனர். இதில் ஒரு பெண்ணின் காது அறுந்து ரத்தம் கொட்டியது. மேலும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். நகைகள் மட்டும் 25 பவுன் இருக்கும்.

பின்னர் துப்பாக்கி முனையில் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு, கொள்ளை சம்பவ தடயங்களை மறைப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

கொள்ளையர்கள் தப்பிச்சென்றதை அறிந்த புஷ்கரனும், குடும்பத்தினரும் எழுந்து செல்போன் மூலமாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து அதில் 4 பேரையும் ஏற்றி அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வட மாநில கொள்ளையர்களா?

தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் பேசியதாக, புஷ்கரன் குடும்பத்தினர் தெரிவித்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பாணியில்...

ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்ட கொள்ளை கும்பல் ‘தீரன்’ சினிமா பட பாணியில் நள்ளிரவை தாண்டி அதிகாலை நேரத்தில் அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு வீடு புகுந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

மேலும் செய்திகள்