“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது” - அண்ணாமலை

நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2021-12-26 12:01 GMT
சென்னை, 

தமிழகத்துக்கு தான் அதிகம் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மருத்துவ படிப்பு இடங்களை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ நீட் மூலம் தான் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது. அது போல் 2021 ஆம் ஆண்டும் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்துக்கு தான் அதிகம் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மருத்துவ படிப்பு இடங்களை இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இது வேறு எங்கும் கிடையாது. பழைய கதையையே பேசுகிறீர்களே, நீட் வெற்றி குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? நீட் தேர்வு வந்த பிறகு தனியார் கல்லூரிகளிலும் அரசு கல்லூரிகளிலும் எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள் என்பதை ஜாதி பிரிவு வாரியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்