மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக போலியாக நேர்முகத்தேர்வு நடத்திய 8 பேர் கைது

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக போலியாக நேர்முகத்தேர்வு நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-27 21:08 GMT
சென்னை,

மத்திய அரசு நிறுவனமான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தென்மண்டல அதிகாரி ஆர்.சுந்தரேசன் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பெயர் மற்றும் ‘லோகோ’வை பயன்படுத்தி, ஒரு மோசடி கும்பல், மதுரை, கோவை, காஞ்சீபுரம் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக போலியான நேர்முகத்தேர்வை நடத்தி உள்ளனர். மேலும் இதுபோல திருப்பத்தூரிலும் போலியான நேர்முகத்தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விசாரணை

இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, கூடுதல் துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி இந்த புகார் மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

8 பேர் கைது

இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் இது தொடர்பாக திருப்பத்தூர் சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். போலியான நேர்முகத்தேர்வு நடத்த இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

கைதான சூர்யாதான் முக்கிய குற்றவாளி. இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர்தான் இந்த போலி வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வை நடத்த மூளையாக செயல்பட்டவர். திருப்பத்தூரைச்சேர்ந்த இவரது அண்ணன் மற்றும் நண்பர் ஒருவரும் இந்த மோசடி முயற்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அலுவலகத்தில் வேலை செய்வதாக சொல்லி இருக்கிறார். அவரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

சூர்யாவுக்கு உறுதுணையாக செயல்பட்ட அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரபு, யோகானந்தம் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களில் யோகானந்தம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

படித்த இளைஞர்கள்

இந்த கைது சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இதுபோல் நேர்முகத்தேர்வு எதுவும் நடக்காது என்பது பெரும்பாலும் தெரிந்த உண்மை. ஆனால் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நன்கு படித்த இளைஞர்கள். சிலர் என்ஜினீயரிங் படித்துள்ளனர். சிலர் இரட்டை பட்ட மேல்படிப்பு கூட படித்திருக்கிறார்கள். அவர்கள் இதுபோல வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு நடத்தப்படுவது பற்றி சரியாக கூட விசாரிக்காமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.15 கோடி வரை வசூலிக்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். சிலரிடம் பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அது பற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

இந்த மோசடி ஓரளவு தடுக்கப்பட்டாலும், மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறி இந்த மோசடி நபர்கள் தனியாக ரூ.1½ கோடி சுருட்டி உள்ளனர்.

இவர்கள் தருவதாக சொன்ன வேலை எதுவும் மத்திய அரசில் இல்லை. மத்திய அரசு பட்டியலில் இல்லாத பெயரில் வேலை இருப்பதாக சொல்லி ஏமாற்றி நேர்முகத்தேர்வு நடத்தி உள்ளனர். இதுபோன்ற வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, படித்த இளைஞர்கள் நன்கு விசாரிக்க வேண்டும். மேலும் வேலைக்காக முன்கூட்டியே பணம் எதுவும் கொடுக்கக்கூடாது. வேலைக்கான அரசாணை எதுவும் கொடுத்தாலும், அது பற்றிய உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் நேரில் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்