திருச்சி: நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்த பிளஸ்-1 மாணவன் பலி

நண்பர்களுடன் தடுப்பணையில் பிளஸ்-1 மாணவன் அப்துல் ரகுமான் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார்.

Update: 2021-12-29 08:38 GMT
திருச்சி,

திருச்சி பெரியகடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்தவர் சையது இப்ராகிம் பாதுஷா. பூவியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது 16). இவர் திருச்சியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை தனது நண்பர்கள் முகமது பயாஸ், சதாம் உசேன், பயாஸ் செரீப் ஆகிய 3 பேருடன் திருச்சி அருகே கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள காவிரியாற்றின் தடுப்பணைக்கு அப்துல் ரகுமான் குளிக்க சென்றார். 4 பேரும் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அப்துல் ரகுமான் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் அவரை மீட்க முடியாவில்லை.

இதனால், அவர்கள் கரைக்கு வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்கியூராஜா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்துல்ரகுமானை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு 11 மணிவரை தேடியும் மாணவர் அப்துல் ரகுமான் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இன்று (புதன்கிழமை) காலை முதல் அப்துல் ரகுமானை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். மதியம் 12.45 மணி அளவில் திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகே அப்துல் ரகுமான் பிணமாக மீட்கப்பட்டான்.  

இதைத் தொடர்ந்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்