கொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு: தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தி வைப்பு

கொரோனா கட்டுப்பாடுகளால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-01-07 20:14 GMT
சேலம்,

சேலத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் உள்ளன. டீசல், டயர் மற்றும் உதிரி பாகங்களின் விலை 20 சதவீதம் உயர்வு, சுங்க கட்டணம், காப்பீடு தொகை, மத்திய-மாநில அரசுகளின் வரி உயர்வால் லாரி உரிமையாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு கிடைக்காமல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் லாரிகளை அதன் உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மீதமுள்ள 2½ லட்சம் லாரிகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் வங்கி, நிதி நிறுவனங்களில் தவணை செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். 25 சதவீத லாரிகள் அதாவது 1 லட்சம் லாரிகள் மட்டும் இயக்கப்படுகிறது.

கால அவகாசம்

தற்போது கொரோனா 3-வது அலையால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லாரி தொழில் பாதிக்கும். மத்திய, மாநில அரசுகள் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் வழங்குவதுடன், வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கொரோனா முடிவுக்கு வரும்வரை மத்திய, மாநில அரசுகள் லாரிகளுக்கு அனைத்து விரிகளையும் ரத்து செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் சரக்கு கிடைக்காது என்பதால் லாரிகள் இயக்கப்படுவது மேலும் குறையும். இதனை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்