தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு; அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
கொரோனா வீரியம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு, பஸ்கள் ஓடாது
அதன்படி தமிழகத்தில் இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. ‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். நகரில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையை மேற்கொள்ள உள்ளனர். மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
போலீசார் எச்சரிக்கை
முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடுக்கக்கூடாது. வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.