11 மருத்துவ கல்லூரிகள்: “தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” - மோடிக்கு எல்.முருகன் நன்றி

புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-11 19:51 GMT
சென்னை, 

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதத்தை மோடி அளித்திருக்கிறார். இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.4 ஆயிரம் கோடியை செலவிட்டு உள்ளது.

இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக ஆயிரத்து 450 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கவுள்ளன. மேலும் மோடி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியையும் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். இதுதவிர செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ரூ.24 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அவர் திறந்துவைக்கவிருக்கிறார். இந்த கட்டிடத்தில் பழமை வாய்ந்த 45 ஆயிரம் சங்க இலக்கிய நூல்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளிலும், உலகின் 100 மொழிகளிலும் திருக்குறளை இந்த தமிழாய்வு நிறுவனம் மொழிபெயர்க்க உள்ளது.

திருக்குறளை பிரபலப்படுத்துவதில் முன்னுரிமை அளித்துவரும் மோடி, எங்கு சென்றாலும் அவரது உரையில் குறளை குறிப்பிடுவதை தவறாமல் செய்து வருகிறார். 11 மருத்துவ கல்லூரிகளையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ள பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்