நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்

நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-01-18 19:03 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 3-வது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12 ஆயிரத்து 125 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரகப்பகுதியில் சென்ட்டுக்கு ரூ.40 ஆயிரம், நகரப்பகுதிகளில் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மறுகுடியமர்வுக்காக 2 ஆயிரத்து 178 சதுர அடி மனையில் ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும். நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது. ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் என்.எல்.சி அறிவித்திருக்கிறது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத அடிமாட்டு விலையாகும். எனவே, விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடியும், வீட்டுமனைகளுக்கு சென்ட்டுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். நிலம் வழங்கும் குடும்பங்களில் இருந்து குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். இவற்றை செய்யாமல் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கலாம் என்று நினைத்தால் அதை பா.ம.க.வும், மண்ணின் மைந்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்