எம்.ஜி.ஆரின் வரலாற்றை திரித்து கூறுவதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

எம்.ஜி.ஆரின் வரலாற்றை திரித்து தவறாக செய்தி அறிக்கை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-18 23:20 GMT
சென்னை,

தி.மு.க. அரசின் செய்திக்குறிப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி வாயிலாக தனக்கென்று தனியிடம் பெற்றவர் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே, என்தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போல பல வெற்றி படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் எம்.ஜி.ஆர்.

அனைத்திற்கும் மேலாக கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும் வசனங்களை எம்.ஜி.ஆரும்., சிவாஜி கணேசனும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால் தான் கருணாநிதியின் எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு. திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய சொர்ணம் என்பவருக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதுதான் இயற்கையின் சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது?.

எம்.ஜி.ஆர். மறுத்தார்

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்து, அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை வைக்கக்கூடாது என்று எம்.ஜி.ஆர். அதை மறுத்தார். ஆனால் முத்துசாமியும், மற்ற அமைச்சர்களும், எம்.ஜி.ஆரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

எம்.ஜி.ஆரின் எண்ணப்படியே திறப்பு விழாவுக்கு முதல்நாளான டிசம்பர் மாதம் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். நம்மைவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். அதன்பின் 1989-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ்நாடு என்று ஒரு வார்த்தையை சேர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று, அதே ஜனாதிபதியை வைத்து திறப்பு விழா நடத்தினார்.

கடும் கண்டனம்

இனியாவது, தி.மு.க. அரசு தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில் வரலாற்றை திரிக்காமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, எம்.ஜி.ஆரை பற்றிய வரலாற்றை திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்