பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 5 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம்

5 நாட்கள் தடைக்கு பிறகு பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Update: 2022-01-19 09:07 GMT
கோப்புப்படம்
பழனி, 

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

இதனிடையே கடந்த 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு தரிசன தடை விதிக்கப்பட்டது. இதனால் பழனிக்கு பாதயாத்திரை மற்றும் காவடி, அலகு குத்தி வந்த பக்தர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். 

இந்நிலையில் நேற்றுடன் 5 நாட்கள் தரிசன தடை நிறைவு பெற்றது.  எனவே இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் காரணமாக பக்தர்கள் பகுதி, பகுதியாக பிரித்து அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்