பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

பெரம்பலூரில் மாட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-01-19 15:47 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர், புதிய மதனகோபாலபுரம், கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். பால் வியாபாரி. இவருக்கு அவரது வீட்டின் அருகே சொந்தமாக உள்ள நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லிலான பழமையான மாட்டு கொட்டகை ஒன்று உள்ளது. 

மெயின் சாலையின் ஓரத்தில் உள்ள இந்த மாட்டு கொட்டகையை கடையாக மாற்றி அமைப்பதற்காக நேற்று காலை வைத்தியலிங்கம் குடும்பத்தினர் கொட்டகையின் உள்ளே பொக்லைன் எந்திரம் கொண்டு சுவரை ஓட்டி மண் கொட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மண் கொட்டப்பட்டிருந்த கொட்டகையின் சுவரின் வெளிப்புறம் அருகே வைத்தியலிங்கத்தின் மனைவி ராமாயி (வயது 44), ராமாயின் தாய் பூவாயி(70), வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் மனைவி கற்பகம்(55) ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மண்ணின் பாரம் தாங்காமல் கொட்டகையின் சுவர் திடீரென்று இடிந்து அந்த 3 பேர் மீது விழுந்தது.

இதில் சுவரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் ராமாயி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த கற்பகம், பூவாயி அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 3 பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தது, அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்தப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்