அ.தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அனைத்து கிரிமினல் அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-01-21 23:18 GMT
சென்னை,

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, அதன் பின்னர் அப்பதவியை வகித்த எடப்பாடி பழனிசாமி ஆகியோரது செயல்பாடுகள் குறித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வந்தார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்த டெண்டர் முறைகேடுகள், போலீஸ் துறையில் வாக்கி-டாக்கி கொள்முதலில் நடந்த முறைகேடு உள்ளிட்டவை குறித்தும் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இதற்காக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் மீது 28 கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

விசாரணைக்கு தடை

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக மனுகளை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு, அந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.

பின்னர் இந்த 28 மனுக்களில் 8 மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தற்போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருக்கும் வக்கீல் பி.குமரேசன், மு.க.ஸ்டாலின் சார்பில் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த 8 வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

மீதமுள்ள 20 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்கை அரசே திரும்ப பெற்றது. 19 வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இதிலும் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் பி.குமரேசன் ஆஜரானார்.

பின்னர் இந்த மனுக்கள் மீதான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.

அரசாணை ஏற்பு

இந்த நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெற்று தற்போதைய தி.மு.க. அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.

அதேபோல மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 19 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடபட்டது. இந்த அரசாணை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி நேற்று பிறப்பித்தார். அதில், மு.க.ஸ்டாலின் மீதான 19 கிரிமினல் அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று, வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்