தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நாளை மீண்டும் முழு ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நாளை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-22 00:29 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று குறைந்த பாடில்லை.

இதில் ஒமைக்ரான் தொற்றும் இணைந்து மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

முழு ஊரடங்கு

20-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் நாளொன்றுக்கு ஏற்படும் தொற்றின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 561 ஆக இருந்தது. தமிழகத்தில் தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், அத்தியாவசிய பணிகள் தவிர முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

முதலாவதாக கடந்த 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் ஆகியவை இயங்கவில்லை.

பார்சல் சேவைகள்

9-ந் தேதியன்று முழு ஊரடங்கின்போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் அதே நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. மற்ற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

9-ந் தேதி மற்றும் மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரெயில் மற்றும் பஸ்களில் பயணிப்பதற்காக விமானம், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டை வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் தற்போது 31-ந் தேதிவரை இரவு 10 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணிவரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி வரும் 31-ந் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் 19-ந் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நடக்க விருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த16-ந் தேதி அரசு அறிவித்தது.

16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கின்போது மருந்துகள் மற்றும் பால் விநியோகம் செய்வதற்கான மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மற்றபடி, அனைத்து வகை கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருந்தது.

கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஊரடங்குகளில் மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் குறைந்திருந்தது. எனவே சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இதன் மூலம் தொற்றுச்சங்கிலி ஓரளவிற்கு உடைக்கப்பட்டு, தொற்றின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

நாளை முழு ஊரடங்கு

இந்த நிலையில் நாளை23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமையன்று) முழு ஊரடங்கை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 23-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் 12-ந் தேதியிட்ட அரசாணையின்படி, கடந்த 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

முந்தைய ஊரடங்கு போலவே

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன்கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 23-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-ந் தேதியன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் ஆகியவை பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக அனுமதிக்கப்படும்.

முழு ஒத்துழைப்பு

மாவட்ட ரெயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பஸ் நிலையங்களுக்கும் இது பொருந்தும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்