திசையன்விளை: ஊரடங்கு விதிமீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Update: 2022-01-23 10:21 GMT
நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெனீஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் தலைமையிலான சுகாதார நிலைய பணியாளர்கள் குழு மற்றும் திசையன்விளை காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் இணைந்து திசையன்விளை புறவழிச்சாலையில் ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது, திசையன்விளை பஜார் பகுதியில் அவசியமின்றி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வாரமும் பஜார் பகுதியில் பரிசோதனை செய்வார்கள் என்ற அடிப்படையில், பலர் திசையவிளை புறவழிச்சாலை வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். 

எனவே காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இன்று திசையன்விளை-நவ்வலடி, நாங்குநேரி-உவரி புறவழிச்சாலையில் முகாமிட்டிருந்தனர். திருமண வீடுகளுக்குச் செல்வதற்காக வேன்களில் வந்தவர்களிடம் திருமண அழைப்பிதழை சரிபார்த்து, அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பின்னரே போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். 

இது தவிர இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை கொரோனா பரிசோதனை செய்வதற்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் திசையன்விளை புறவழிச்சாலை பகுதியில் இன்று 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்