அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி தலைமைச்செயலக ஊழியர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமைச்செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-24 20:43 GMT
சென்னை,

சென்னை வில்லிவாக்கம் பெருமாள் காலனியைச்சேர்ந்தவர் ராஜமுருகபாபு (வயது 50). அரசு ஊழியரான இவர், சென்னை கோட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கு நன்கு தெரிந்த நிக்சன் (53) என்பவர் தலைமைச்செயலகத்தில் ஊழியராக வேலை செய்கிறார். சேத்துப்பட்டு, மங்களபுரத்தைச் சேர்ந்த அவர் தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், தன்னால் வேலை வாங்கித்தர முடியும் என்றும் தெரிவித்தார்.

அதை நம்பி அரசு வேலைக்காக, எனக்கு தெரிந்த 5 நபர்களிடம் ரூ.14 லட்சம் வாங்கி, நிக்சனிடம் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக நிக்சன் ஏமாற்றி வந்தார். அவர் மோசடி செய்யும் நோக்கில் ரூ.14 லட்சத்தை வாங்கி உள்ளார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, பணத்தை வசூல் செய்து தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

கைதானார்

இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் நிக்சன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக, கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்