“ஹிஜாப் அணியலாம் என பலமுறை எனக்கே தோன்றி இருக்கிறது” - லட்சுமி ராமகிருஷ்ணன்

தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து பழக்கப்பட்டவர்களிடம் அதை அகற்றுமாறு கூறுவது மிகுந்த வலியை தரும் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2022-02-09 09:21 GMT
சென்னை,

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹிஜாப் அணியும் பெண்களிடம் அதை அகற்றுமாறு கூறுவது மிகவும் அவர்களுக்கு மனதளவில் மிகுந்த வலியை தரும் என்று கூறியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-

“ஒரு இஸ்லாமிய நாட்டில் 22 ஆண்டுகள் இருந்ததால், இது குறித்து நான் சொல்கிறேன். தங்கள் விருப்பத்தின்படி ஹிஜாப் அணிந்து பழகிய பெண்களிடம், அதை அகற்றுமாறு கட்டாயப்படுத்துவது, அவர்களுக்கு மிகுந்த வேதனையையும், அவமானத்தையும் கொடுக்கக் கூடிய அனுவமாக இருக்கும். 

இது மிகவும் உணர்வுப்பூர்வமானது. இதில் தலையிட்டு, இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவது மிகப்பெரிய தவறு. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். 

ஹிஜாப்பை தொடர்ந்து அணிபவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பான உணர்வை கொடுக்கும். சில நேரங்களில் மோசமான விமர்சனங்கள், கெட்ட வார்த்தைகளில் பேசுபவர்களை பார்க்கும் போது நாமும் ஹிஜாப் அணிந்து கொண்டால் இது போன்ற அருவருக்கத்தக்க நிகழ்வுகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம் என பலமுறை எனக்கே தோன்றி இருக்கிறது. 

எனவே அவ்வாறு தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து பழக்கப்பட்டவர்களிடம் அதை அகற்றுமாறு கூறுவது மிகுந்த வலியை தரும். இது சரியல்ல.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்