தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு

ஆயுத விற்பனை தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-18 17:24 IST

வாஷிங்டன்,

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 82 உயர் இயங்குதிறன் கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்புகள் (HIMARS) மற்றும் 420 ராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகள் (ATACMS), ஹெலிகாப்டர் உதிரிபாகங்கள், ராணுவ மென்பொருள் ஆகியவை அடங்கும். முன்னதாக ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் தைவானுக்கு அமெரிக்கா 8.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அயுதங்களை விற்பனை செய்திருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் அறிவிப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், “தைவான் ஆயுதப்படைகள் வன்முறையை பயன்படுத்த முயற்சிக்கின்றன. மக்களின் பணத்தை ஆயுதங்கள் வாங்குவதற்காக வீணடித்து தைவானை ஒரு வெடிமருந்து கிடங்காக மாற்றுகின்றன.

இதனால் தைவான் பிராந்தியத்தில் ராணுவ மோதல் மற்றும் போர் சூழல் உருவாகும். ஆயுதங்கள் மூலம் சுதந்திரத்தை பெறுவதற்கான தைவானின் முயற்சி, அமெரிக்காவின் ஆதரவுடன் பின்னடைவில் மட்டுமே முடியும். சீனாவை கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி வெற்றி பெறாது” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்