பொய்யான தகவல்களை கொடுத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு சிறை தண்டனை

பொய்யான தகவல்களை கொடுத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு 4 வார சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Update: 2022-04-11 22:03 GMT
சென்னை,


சென்னை ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகுமார் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:-

பொதுநல வழக்குகள்

சென்னை ஐகோர்ட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் ஏராளமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில், சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை முகவரியை குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது ஆதார் அட்டையில் கன்னக்குறிச்சி, பண்ணையார் சுப்பராயன் தெரு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சேலம் சுகவனேஸ்வரர் கோவில், சேலம் ஆத்தூர் காமநாதீஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி சக்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களின் அறங்காவலர் என்று குறிப்பிட்டு, கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி 13 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

தவறான முகவரி

பொய்யான தகவல்களைத் தெரிவித்து பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ள இவரை கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்மனுதாரர் ராதாகிருஷ்ணனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

அதற்கு அவர், ‘நான் அல்லிக்குட்டை கிராமத்தில்தான் பிறந்தேன். 2003-ம் ஆண்டு வரை அங்குதான் வாழ்ந்தேன். அல்லிக்குட்டைக்கும், கன்னக்குறிச்சிக்கும் 15 நிமிட பயண தூரம்தான். அதனால், தவறான முகவரியை நான் கொடுக்கவில்லை’ என்று கூறினார்.

ஆங்கிலம் தெரியாது

மேலும், ‘கோவில்களின் சொத்துகள் மீதான ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், ஐகோர்ட்டில் பல வழக்குகளை தொடர்ந்தேன். இந்த கோவில்களில் நான் கட்டளைதாரராக உள்ளேன். ஆங்கிலம் அந்த அளவுக்கு தெரியாது என்பதால், கட்டளைதாரர் என்பதை ஆங்கிலத்தில் ‘டிரஸ்டி' என்று குறிப்பிட்டுவிட்டேன். வேறு எந்த ஒரு உள்நோக்கமும் எனக்கு இல்லை’ என்றும் விளக்கம் அளித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு கண்காணிப்பு

ஆவணங்களை எல்லாம் பார்க்கும்போது, எதிர்மனுதாரர் ராதாகிருஷ்ணன் தன்னை கோவில் அறங்காவலர் என்று மனுவில் குறிப்பிடுவதை வழக்கமாக செய்பவர் என்று தெரிகிறது. இவர் கோவில் சொத்து ஆக்கிரமிப்பு குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு தலைமை நீதிபதி அலுவலகம் அனுப்பி, தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.

இதைக் காட்டி, இந்த பிரச்சினையை ஐகோர்ட்டு கண்காணிக்கிறது என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதுமட்டுல்ல, இவர் மீது வீராணம், சேலம், தாரமங்கலம் போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 4 வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 வழக்குகளின் நிலை என்ன என்று தெரியவில்லை.

மிரட்டல்

பொதுநல வழக்கு தொடர்பவர்கள் தங்களது உண்மையான முகவரியை மனுவில் தெரிவிக்க வேண்டும். அதை ராதாகிருஷ்ணன் செய்யவில்லை. அவர் கூறும் விளக்கத்தையும் ஏற்க முடியாது. அதேபோல, கோவில் கட்டளைதாரர் என்றால், அன்னதானம் செய்பவர், பூஜை செய்ய நன்கொடை வழங்குபவர் என்று அர்த்தம். ஆனால் டிரஸ்டி என்பது உயர்ந்த பதவி ஆகும். அதற்கு தமிழில் அறங்காவலர் என்ற வார்த்தையும் உள்ளது. அதனால் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறும் விளக்கத்தையும் ஏற்க முடியாது.

எனவே, நீதித்துறையின் செயல்பாட்டை பிறரை மிரட்டுவதற்கும், தன்னை நல்லவனைப் போல காட்டிக்கொண்டு பொதுமக்களை எரிச்சல் அடைய செய்வதற்கும் ராதாகிருஷ்ணன் பயன்படுத்தியுள்ளார்.

சிறை தண்டனை

ராதாகிருஷ்ணனின் செயல் கோர்ட்டு அவமதிப்பு என்பதால், அவருக்கு 4 வார சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கிறோம். சேலம் தலைமை மாஜிஸ்திரேட்டு, எதிர்மனுதாரர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாரண்டு பிறப்பித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்