பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு.

Update: 2022-04-12 21:53 GMT
சென்னை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா முகவூர் முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தொந்தி கணேஷ் என்ற கணேஷ் (வயது 31). இவருக்கும், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மேகலா என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது.

இதன்காரணமாக கணேஷ், மேகலாவுக்கு ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்து இருந்தார். இந்தநிலையில் கணேசுடன் இருந்து வந்த உறவை துண்டித்து விட்டு மேகலா தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து மேகலா குறித்து கணேஷ் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது நெருங்கிய தோழியான லட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி, மேகலா குறித்து விசாரிப்பதற்காக இன்னொரு முறை வீட்டுக்கு வந்தால் போலீசில் புகார் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ், கடந்த 8.9.2016 அன்று லட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆர்த்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்