‘நரிக்குறவர்-இருளர் மக்களின் வாழ்வில் அணையா விளக்கை ஏற்றுவோம்' - முதல்-அமைச்சர் உறுதி

நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் அணையா விளக்கை ஏற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-04-16 00:00 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 பேருக்கும், குடும்ப அட்டை 20 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 4 பேருக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 பேருக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தொடர்ந்து, ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் மாணவி தர்ஷினி வீட்டுக்கு சென்று காலை உணவு சாப்பிட்டார். மேலும், மக்கள் பயன்பாட்டுக்காக உயர் மின்கோபுர விளக்குகளையும், குடிநீர் தொட்டிகளையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு, நரிக்குறவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 30 பேருக்கும், குடும்ப அட்டை 18 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 6 பேருக்கும், கிராம நத்தம் பட்டா 46 பேருக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 22 பேருக்கும் என மொத்தம் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இன்ப அதிர்ச்சி

அப்போது அந்த மக்கள் “எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் நேரில் வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, நீங்கள் பொறுப்பேற்றவுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், சாலைகள், குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை அமைத்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துக் கொண்டனர்.

அதற்கு முதல்-அமைச்சர் “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம் என்றும், கடந்த மார்ச் 31-ந் தேதி டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தபோது கூட, நரிக்குறவர் சமுதாயத்தை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி மனு வழங்கினேன்” என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஆய்வு செய்து, அந்த ஒவ்வொரு குடும்பத்துக்குமான அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படுகிறது? என்பதற்கு ஒரு பட்டியல் எடுத்து, ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக அனுப்பவேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டேன். அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு கடந்த 4, 5 மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம்

நரிக்குறவர், பழங்குடியின மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நீங்கள் தேடி வர தேவையில்லை, நாங்களே தேடி வந்து அந்த உதவிகளை செய்யக்கூடிய ஒரு அரசாக இந்த அரசு, எங்கள் அரசு என்று கூட நான் சொல்லமாட்டேன். நம்முடைய அரசு, ஏன் என்றால் நீங்கள் அதில் இருக்கிறீர்கள். நமது அரசு என்றால், இது உங்களுடைய அரசு. இது விளிம்புநிலை மக்களுக்கான அரசு. ஆகவேதான் அவர்களை ஒவ்வொரு குடும்பமாக தேடி ஒவ்வொரு அடிப்படை தேவைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம்.

விளிம்புநிலை சமுதாயத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள், துணிச்சலாக பேசுவதை பார்த்து உள்ளபடியே ஆச்சரியமாக இருக்கிறது, அதிசயமாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமை குரல், இந்த பெண் பிள்ளை வழியாக இன்றைக்கு ஒலிக்கக்கூடிய காட்சியை நாம் பார்க்கிறோம். அதனால்தான் விளிம்புநிலை மாணவிகள், திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகிய 3 பேரையும் கோட்டையில் உள்ள எனது அறைக்கே அழைத்து பேசினேன்.

அணையா விளக்கு

பெண்ணுரிமைக்காக போராடிய திராவிட இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, இந்த வெற்றி என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன். ஆகவே அந்த வெற்றியை யார் மூலமாக பார்க்கிறேன் என்றால், அஸ்வினி (மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ பெண். கோவிலில் நடந்த அன்னதானத்தில் உணவு அளிக்க மறுக்கப்பட்ட பெண்) வடிவிலும், திவ்யா வடிவிலும். உள்ளபடியே நான் நெகிழ்ந்து போனேன், மகிழ்ச்சியடைந்தேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டுக்கு போனேனோ, அதேபோல் திவ்யா, தர்ஷினி வீட்டுக்கும் வந்திருக்கிறேன்.

நமது அரசு நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் அப்படியொரு அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த அரசு உங்களுக்காக (நரிக்குறவர்கள்) என்றைக்கும் துணைநிற்கும். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படவேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்ன பிரச்சினை இருக்கிறதோ, அதற்கெல்லாம் சட்டரீதியாக நிச்சயமாக அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி தருவோம். தமிழ்நாட்டு மக்களுக்காக, ஒவ்வொரு இலக்கினை எட்டிடவும் - இந்த திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, இது தொடரும், இந்த அரசு உங்களுக்காக தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு

ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சென்னை திரும்பும் வழியில் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின்போது, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூர்யகுமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்