2 முறை கர்ப்பமாக்கிவிட்டு ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்கிறார் - இளம்பெண் போலீசில் புகார்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை கர்ப்பமாக்கிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-04-20 02:16 GMT
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று வருவேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து நட்பு வளர்ந்ததால் ஒருநாள் அவர், என்னுடைய தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரை அருகே இருந்து கவனிப்பீர்களா? என்று கேட்டார். உடனே நானும் கடந்த 2017-ம் ஆண்டு அவர் வீட்டுக்கு சென்று உதவியாய் இருந்தேன். அப்போது அவர் என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.

இதையடுத்து உன்னையே நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று அவர் என்னிடம் கூறி சமாதானப்படுத்தினார். இதை நானும் நம்பினேன். அதன்பின்னர் அவர் என்னை சேலம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார்.

பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால் மீண்டும் கர்ப்பமானேன். இதைத்தொடர்ந்து மறுபடியும் என்னை சேலம் அழைத்து சென்று மனைவி என்று டாக்டர்களிடம் கூறி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்தார்.

அதன்பிறகு என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தினேன். அதற்கு அவர் வேதம் படித்து வருகிறேன் என்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார். தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்துள்ளார். அவரிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

அதற்கு அவர் இப்போது நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார். அதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.

மேலும் செய்திகள்