1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

மாநில சராசரியை விட தமிழகத்தில் 25 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, மேலும் 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-04-20 23:49 GMT
சென்னை,

தமிழகத்தில் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதனால், தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டியது.

இந்தநிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ளதால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாரந்தோறும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

அந்தவகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தமிழகத்தில் மாநில சராசரியை விட 25 மாவட்டங்களில் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

25 மாவட்டங்களில் குறைவு

தமிழகத்தில் சென்னை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, கோவை, ஈரோடு, நாமக்கல், பூந்தமல்லி, பழனி, சேலம், வேலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர் ஆகிய 18 சுகாதார மாவட்டங்களில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி, மாநில சராசரியான 70.35 என்ற சதவீதத்தை காட்டிலும் குறைவான நபர்களுக்கே செலுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மாநில சராசரியான 86.79 சதவீதத்தை காட்டிலும், 20 மாவட்டங்களில் தடுப்பூசி செயல்பாடுகள் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 67.1 சதவீதத்தினர் மட்டுமே இந்த வயதுடையோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாநில சராசரியான 92.40 சதவீதத்தை காட்டிலும் 25 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

1.4 கோடி பேர் செலுத்தவில்லை

அந்தவகையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் என பல தரப்பினரும் தற்போது வரை தமிழகத்தில் 54.71 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். தற்போது தமிழகத்தில் 1.29 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் சுகாதார அலுவலர்கள் தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்துக்கும் அதிகமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்