அரசியலில் உறவும் தேவை இல்லை; பகையும் தேவை இல்லை - கமல்ஹாசன் பேச்சு

அரசியலில் உறவும் தேவை இல்லை, பகையும் தேவை இல்லை என கமல்ஹாசன் பேசினார்

Update: 2022-04-24 20:53 GMT
சென்னை,

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி காணொலிக்காட்சி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவோம் என்பது உள்பட 7 அம்ச உறுதிமொழிகளை கமல்ஹாசன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் எடுத்துக்கொண்டனர்.

அரசு கவனிக்க வேண்டும்

அதையடுத்து கமல்ஹாசன் பேசியதாவது:-

கிராமசபையை மக்களிடம் கொண்டுசென்றது மக்கள் நீதி மய்யம். எங்களுடைய மற்றும் மக்களின் முயற்சி காரணமாக வருடத்துக்கு 6 முறை கிராமசபை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் 6 ஆயிரம் கிராமசபை கூட்டம் நடத்தினாலும், அதில் செயல்பாடு இருக்க வேண்டும். நேர்மையாக கிராமசபை நடத்தப்படுகிறதா, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும்.

பல்வேறு கட்சிகள், பல்வேறு சித்தாந்தங்கள் இருந்தாலும் அனைவரும் மக்கள் நலம் என்ற பாதையில் செல்லவேண்டும். அரசியலில் உறவும் தேவை இல்லை, பகையும் தேவை இல்லை. நல்லது நடக்கும்போது பாராட்டுவதும், தவறுகள் செய்யும்போது விமர்சிப்பதும் எங்களுடைய நோக்கம்.

பா.ஜ.க.வின் ‘பி டீம்’

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் கவர்னர் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம், இத்தனை ஆணவத்துக்கும் என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் ஜனநாயகம் என்று ஒன்று இருப்பது போல பிரமை இருக்கிறது. ஜனம் தனியாகவும் நாயகம் தனியாகவும் நடந்துகொண்டிருக்கிறது. அதிகாரம் ஒரு சார்பாக உள்ளது. அவர்கள் மக்களை விளையாட்டுப் பொம்மையாக கருதுகின்றனர். அதிகாரம் மக்கள் கையில் வந்தால்தான் ஜனநாயகம் இருக்கும்.

கிராமசபை வெறும் பேச்சுக்கூட்டமாகவே இருக்கக்கூடாது. அதற்கான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு, சாலை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றிவிட்டு, மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள். என்னை பா.ஜ.க.வின் ‘பி டீம்' என்றார்கள். ஆனால் என்னை விமர்சனம் செய்தவர்கள்தான் தற்போது பா.ஜ.க.வின் ‘பி டீம்' ஆக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்