‘‘சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.தி.மு.க. என்றும் செயல்படும்’’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘‘சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அ.தி.மு.க. என்றும் செயல்படும்’’, என்று ‘இப்தார்’ நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினர்.

Update: 2022-04-28 22:50 GMT
சென்னை,

அ.தி.மு.க. சார்பில் ‘இப்தார்’ நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் நேற்று மாலை நடந்தது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, பி.எச்.மனோஜ்பாண்டியன், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், தெஹடியான், கரீம் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன்

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நமது நாடு பல மதங்கள் வேறூன்றி உள்ள நாடு. ஒவ்வொரு மதத்துக்கும் அதற்குரிய இடம் அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம் மற்றொரு மதத்தின் கோட்பாடுகளின் வழியில் குறுக்கிட கூடாது. ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வும் அனைத்து மக்களையும் தம் மக்களாக நினைத்து ஒற்றுமையை மட்டுமே வேதமாக கருதி செயல்பட்டதின் விளைவே, இன்றைக்கு தமிழக மக்கள் சாதி-மத, இன வேறுபாடுகளை கடந்து மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு சந்தனக்கட்டைகள் வழங்கியது, ஹஜ் புனித பயணத்துக்கான நிதி அதிகப்படுத்தியது, உலமாக்கள் ஓய்வூதியம் உயர்த்தியது என சிறுபான்மைப்பிரிவு சமுதாயத்துக்கு ஜெயலலிதா செய்த நலத்திட்டங்கள் ஏராளம்.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவை தொடர்ந்து அ.தி.மு.க. தொடர்ந்து சிறுபான்மையினரின் பாதுகாவலனாக என்றும் செயல்படும். வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமல்லாமல், செயலிலும் கடைபிடித்து வருபவர்கள் நாங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்டங்கள்

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நோன்பு இருப்போருக்கு இறைவனே நேரடியாக வந்து கூலி தருவான் என்பார்கள். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு மதநல்லிணக்கம் தாண்டவமாடும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும், அவரது காலத்துக்கு பிறகு இப்தார் நிகழ்ச்சி தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட ஹாஜிக்கள் ஊதியம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இஸ்லாமிய சமூகத்துக்கு அ.தி.மு.க. அரசு முன்னெடுத்திருக்கிறது. ஜெயலலிதா வழியில் சிறுபான்மை சமூக மக்களுக்கு பாதுகாவல் அரணாக அ.தி.மு.க. என்றும் திகழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்