விக்னேஷ் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம் -எடப்பாடி பழனிசாமி பேட்டி

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகவும், ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2022-05-06 22:23 GMT
சென்னை,

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் சட்டசபையில் தெரிவித்த செய்தியும், தற்போது பிரேத பரிசோதனை ஆய்வின் செய்தியும் முரண்பட்ட காரணத்தால் இந்த வழக்கை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த இதை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் சி.பி.சி.ஐ.டி. வசம் ஏற்கனவே இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

நாங்கள் குறிப்பிட்டவாறு விக்னேசுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால் அதை அரசு ஏற்க மறுத்ததால் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்.

சீர்குலைந்துள்ளது

தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது. விக்னேஷ் என்ற இளைஞனை காவல்துறையினர் கொடூரமாக தாக்கி அவர் இறந்துள்ளார். முதல்-அமைச்சரே இதை கொலை வழக்காக பதிவு செய்வோம் என்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். அந்த அளவு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

பெண்களுக்கு கூட்டு பாலியல் தொல்லை, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போன்றவை அதிகரித்துள்ளன.

கடந்த ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது.

பழிவாங்கும் நோக்கம்

500 ஆண்டுகளுக்கு மேலாக தருமபுர ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அதற்கு அங்குள்ள மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது ஆன்மிகம் சார்ந்தது. பழிவாங்கும் நோக்கத்தோடு தி.மு.க. அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்