திருப்பூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி

பல்லடம் அருகே கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-08 05:05 GMT

திருப்பூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி

பல்லடம்

பல்லடம் அருகே கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர் ராமநாதன் என்பவரது மகன் கோபால் (வயது 35). இவரது மனைவி சுசீலா(30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கோபால் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 4-ந்தேதி பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

6 பேர் கைது

இதைத் தொடர்ந்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கோபாலை அவரது மனைவியே சிலருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக சுசீலா வேலை பார்த்து வந்த பனியன் நிறுவனத்தின் மேலாளர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் மாரிஸ் என்கின்ற மாரீஸ்வரன் (26), கூலிப்படையை சேர்ந்த கரூர் மாவட்டம் குளித்தலை அன்பழகன் மகன் கிடா என்கிற வினோத், (28), அவரது நண்பர் குளித்தலையைச் சேர்ந்த விஜய் (25) மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த ஆனந்தன் மகன் மதன்குமார் (21), குளித்தலையைச் சேர்ந்த நடராஜன் மகன் லோகேஸ்வரன் (20), சிவகங்கையை சேர்ந்த மதி மகன் மணிகண்டன் (24) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரீஸ்வரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

உல்லாசம்

நான் பல்லடம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனத்தில் சுசீலா வேலைக்கு சேர்ந்தார். நான் அவரிடம் முதலில் நட்பாக பழகினேன். அதுவே பின்னர் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.

அதன் பின்னர் என்னுடன் வந்துவிடு, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சுசீலாவிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். ஆனால் எங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கோபாலை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். இதற்காக குளித்தலையைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் கிடா என்கிற வினோத்தை எங்களது பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளி மூலமாக சந்தித்தோம். அவர் கோபாலை கொலை செய்ய ரூ.6 லட்சம் கூலி கேட்டார். முன்பணமாக அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தேன். மீதி பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக கூறினேன். ஆனால் பணம் வந்தவுடன் தான் கொலை செய்வேன் என அவர் உறுதியாக சொல்லிவிட்டார். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்த மாதம் 30-ந்தேதி வரை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன்.

திட்டம் தீட்டி கொலை செய்தோம்

எங்கள் திட்டப்படி கடந்த 4-ந்தேதி சுசீலா தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு துணி எடுக்க திருப்பூர் செல்லலாம் என்று அழைத்தார். கோபால் இரவு 8 மணிக்கு வருவதை உறுதி செய்த சுசீலா என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இந்த விவரத்தை வினோத்திடம் தெரிவித்தேன். இதையடுத்து வினோத் தனது கூலிப்படையினருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கோபாலை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இவ்வாறு மாரீஸ்வரன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான சுசீலாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்