எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்க ஏதுவாக சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டமசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-10 21:38 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தற்போது வேந்தர் அதிகாரத்தில் உள்ள கவர்னர் நியமித்து வருகிறார். இந்தநிலையில் அரசியல் சூழ்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசே எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குஜராத் போல....

1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம் மற்றும் 1991-ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம் ஆகியவற்றில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரத்தை அந்த மாநிலங்கள் கொண்டுள்ளன. 2000-ம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டும். இந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. அதற்கேற்றபடி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

நீக்கும் அதிகாரம்

இந்த சட்டமசோதாவின்படி, துணை வேந்தரை நீக்குவதற்கான சட்டத்தில் புதிய பிரிவை புகுத்த வேண்டும். அதாவது, சட்டத்தின்படி நடந்து கொள்ளாதது அல்லது வேண்டும் என்றே செயல்படாமல் இருப்பது அல்லது அவரிடம் உள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகிய காரணங்களின் பேரில் துணை வேந்தரை அரசு ஆணை பிறப்பிக்காமல் நீக்க முடியாது.

அவர் மீது பதவி நீக்கம் தொடர்பான முன்மொழிவு அளிக்கப்பட்டு இருந்தால், ஐகோர்ட்டு நீதிபதி அல்லது தலைமைச்செயலாளர் பதவிக்கு குறையாத அரசு அதிகாரியின் விசாரணைக்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்போது துணை வேந்தர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

பின்னர் விசாரணை அறிக்கையை துணை வேந்தருக்கு வழங்கி அதில் அவரது கருத்துகள் ஏதும் இருந்தால் அதை பெற வேண்டும். அதன்பின்னரே அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேளாண்மை பல்கலைக்கழகம்

இந்த நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதுபோன்ற சட்டமசோதாவை நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்தார். அதில், ‘குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. அதற்கேற்றபடி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 2 சட்ட மசோதாக்களும் சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டமசோதாக்களுக்கு கவனர் ஒப்புதல் வழங்கிய பிறகு, இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் நிலை உருவாகும்.

மேலும் செய்திகள்