தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2022-05-11 23:57 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்தன. சான்றிதழை தொலைத்துவிட்டு அதை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றனர். அந்த கட்டணத்தைத்தான் உயர்த்தி இருக்கின்றனர்.

அதை வேண்டாம் என்று துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதுபற்றி இன்றே ஆணை பிறப்பிப்பதாக அவரும் கூறியிருக்கிறார். எனவே அந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

காலியிடங்களுக்கான காரணம்

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடம் வருவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு முன்பே என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதுதான். என்ஜினீயரிங் கல்விக்கு தேர்வானவர்கள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்கு சென்றுவிட்டனர். எனவே நீட் தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த இருக்கிறோம். அதுதான் சரியாக இருக்கும்.

17-ந்தேதி ஆலோசனை

அதுபற்றி 17-ந்தேதி மாலையில் ஆலோசனை கூட்டத்தை கூட்ட உள்ளோம். அந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தொழில் கல்வி இயக்குனர், ஆணையர், தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். அதுபற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. தூரத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர பலர் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்து ஆன்லைனில் கொண்டு வந்தோம். ஆனால் ஆன்லைனில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

அதை கடந்த ஆண்டு கூடுமான வரை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. இதுபற்றியும் கலந்தாலோசனை செய்வார்கள்.

ஆன்லைனில் நடைபெற்றால் மாணவர்களுக்கு அலைச்சல் இருக்காது. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் தேர்வு முறைகளை எப்படி அணுகுவது? என்பது பற்றி 17-ந்தேதி மாலை முடிவு செய்து அன்றே அறிவிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்போது?

நீட் தேர்வு முடிந்த உடனேயே என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்ற வகையில் 17-ந்தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது மாணவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? என்ற வசதிகளை தெரிந்துகொண்டு சேர்வதற்கான நடைமுறையை எளிதாக்கப்படும்.

ஆன்லைன் கலந்தாய்வை மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் சொந்த போன் மூலம் அல்லது அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்திருக்கிறார். மேலும் கூடுதல் வசதியாக மையங்களையும் உருவாக்கி வைக்க இருக்கிறோம். அங்கு சென்றும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ஆயிரம் ரூபாய்

பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்