வீடு கட்ட லஞ்சம் கேட்டதால் வாலிபர் தற்கொலை: தமிழக அரசை மக்கள் தட்டிக்கேட்பார்கள் அண்ணாமலை அறிக்கை

லஞ்சம் கேட்டதால் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் மரணத்திற்கு அரசை மக்கள் தட்டிக்கேட்பார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-05-12 22:14 GMT
சென்னை,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மத்திய அரசின் பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்த வீடு கட்டி வருகிறார். திராவிட மாடலின் புரையோடிப்போன லஞ்சம் அந்த இளைஞன் உயிரை பலிவாங்கி விட்டது. மத்திய அரசு இலவசமாக வழங்கும் பணத்தை முழுமையாக மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

அப்பாவி உயிர் பலியான பிறகு லஞ்சம் கேட்ட மேற்பார்வையாளர் மகேஸ்வரனை மாவட்ட கலெக்டர், தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, அமைதியாகி விட்டார். இது யாருக்கோ எங்கோ நடந்த சம்பவம் அல்ல, நமக்கு நாளை நடக்கப்போகும் சம்பவத்திற்கான முன்னெச்சரிக்கை.

இதயம் வலிக்கிறது

மத்திய அரசுப்பணத்தை மாநில மக்களுக்கு வழங்க கட்டிங், கமிஷன், கலெக்ஷன். அச்சமின்றி அதிகாரிகள் லஞ்சம் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறையின் கைகள் ஆளும் கட்சியினரால் கட்டப்பட்டு விட்டன.

ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யத்துக்கு இன்னும் எத்தனை உயிர்பலி தேவை?. எனக்கு இதயம் வலிக்கிறது. அப்பாவி இளைஞனின் உயிர் திரும்ப வருமா?.

பிரதமர் இலவசமாக வழங்கிய கனவு இல்லத்தை, கிடைக்கச் செய்யாமல் காசுக்காக மனித உயிரைக்காவு வாங்கிய தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும். மாநில அரசை மக்கள் தட்டிக்கேட்பார்கள். மத்திய அரசு வழங்கும் நிதியை எல்லாம் பொய்யைச் சொல்லி ஏமாற்றி, நாடக அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு, மக்கள் அறிவு புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்