குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2022-05-14 11:21 IST
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ்பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர் திருவிழாவும், கோவில் வளாகத்திலேயே அம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  இந்த ஆண்டு தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் செய்யப்பட்டு தேரில்  எழுந்தருளினார். தேர்த்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் எம்.எல்.ஏ அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசன், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், தாசில்தார் லலிதா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து செல்லப்பட்டது.

நேர்த்திகடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி வந்தனர், தொடர்ந்து மிளகு மற்றும்  உப்பை கோவில் மீது எறிந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்த்திக் கடனுக்காக தேரில் அம்மனிடம் வைத்து வழிபட்டனர்.

தேரோட்டத்தின் போது பாதுகாப்பு பணியில்  200-க்கும் மேற்பட்ட  போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


 

மேலும் செய்திகள்