25 வாகன ஓட்டிகள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்

போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திய 25 வாகன ஓட்டிகள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர் கள்ளக்குறிச்சி போலீசார் நடவடிக்கை

Update: 2023-02-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரிசாலை, துருகம் சாலைகளில் பொதுமக்கள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்திவிட்டு வெளியூர் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்கின்றனர். அதேபோல் சில டிரைவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர். இதனால் நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலையோரம் தடுப்பு கட்டைகள் வைத்துள்ளனர். இருப்பினும் சிலர் தடப்புகட்டைக்குவெளியே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறனர்.

இந்த நிலையில் நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது தடுப்பு கட்டைகளுக்கு வெளியே நின்று பயணிகளை ஏற்ற முயன்ற 10 ஆட்டோக்கள், நிறுத்தி வைக்கப்பட்ட 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார் இனிமேல் சாலைவிதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த மாட்டோம் எனவும், வாகனங்கள் ஓட்ட மாட்டோம் என்றும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி விட்டு பறிமுதல் செய்த வாகனங்களை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்