தீபாவளி தொடர்விடுமுறை: விவேகானந்தர் மண்டபத்தை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

தீபாவளி தொடர்விடுமுறை எதிரொலியாக விவேகானந்தர் மண்டபத்தை சுமார் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்;

Update:2022-10-25 14:45 IST

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்டகியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

இந்த சுற்றுலா தளங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 6 ஆயிரத்து 600 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 900 பேரும், தீபாவளி பண்டிகையான நேற்று 9 ஆயிரத்து 400 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்