வசந்தபுரத்தில் மின்கசிவால் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

வசந்தபுரத்தில் மின்கசிவால் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

Update: 2022-06-30 16:53 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே மேல்மாடியில் குடியிருப்பவர்கள் தங்களது வாகனங்கள் வங்கியின் அருகே நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட், ஒரு பேட்டரி மொபட் ஆகியவை நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பேட்டரி ஸ்கூட்டர் சார்ஜ் போடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் சார்ஜ் போடப்பட்டு இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு மொபட்டில் தீப்பிடித்தது.

இதனை தொடர்ந்து அருகில் இருந்த இரண்டு வாகனங்களும் தீ பரவியது. இதையடுத்து 3 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் 3 வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுஒருபுறம் இருக்க அருகில் உள்ள வங்கியில் அபாய மணி ஒலிக்க தொடங்கியது. இதனை கண்ட வங்கி ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற நல்லூர் போலீசார் அபாய மணி ஒலிப்பதை நிறுத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்