காரில் ரூ.20 லட்சம் திருடிய 3 பேர் கைது ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

பரமத்திவேலூரில் காரில் ரூ.20 லட்சம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-09 19:29 GMT

பரமத்திவேலூர்

ரியல் எஸ்டேட்

பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி (வயது 49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் என ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.

காரிலேயே ரூ.20 லட்சத்தை வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் மீண்டும் காரை எடுக்க வந்த போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பாலசுப்பிரமணி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸ் விசாரணை

புகாரின்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.20 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சென்னை அருகே உள்ள மணலி செல்லும் வழியில் டோல்கேட் அருகே இருந்த டாஸ்மாக் கடையின் அருகில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் மரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை, மணலி, ஜே.ஜே நகரைச் சேர்ந்த லட்சுமய்யா மகன் சுனில் குமார் (28), சென்னை, அம்பத்தூர், கள்ளிக்குப்பத்தில் வசித்து வரும் டேவிட் பாபு மகன் ஆனந்த் (எ) அஜீத் (26), சென்னை கொரட்டூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த தேவதாஸ்பாபு மகன் சர்க்காரியா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இவர்கள் 3 பேரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வங்கியில் பணம் எடுக்க செல்பவர்களை கண்காணித்து பணத்தை திருடியதும், அதேபோல கடந்த மாதம் 17-ந் தேதி பரமத்திவேலூர் மருதன் காலணியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலசுப்பிரமணி வங்கி மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காரில் கொண்டு வந்த ரூ.20 லட்சத்தை கார் கதவை உடைத்து திருடி சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் தனிப்படை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 20 ஆயிரத்தை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்