ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது

பொள்ளாச்சியில், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 148 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-01-01 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 389 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 148 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கோவை வாளையாறு, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு வழியாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுக்க பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டில் மட்டும் 404 வழக்குகளில் 389 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ரூ.65 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் கைது

கடந்த ஆண்டு கடத்தல்காரர்களிடம் இருந்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 77 குவிண்டால் ரேஷன் அரிசியும், மண் எண்ணெய் 402 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. 23 சமையல் கியாஸ் சிலிண்டரும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா 30 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 389 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் 53, மோட்டார் சைக்கிள்கள் 74, மூன்று சக்கர வாகனங்கள் 21 என மொத்தம் 148 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ரூ.65 லட்சத்து 8 ஆயிரத்து 205 மதிப்பிலான ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிறப்பு ரோந்து படை

மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 642 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 332 பேர் கைது செய்யப்பட்டனர். 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 134 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் 2022-ம் ஆண்டு 75 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 69 ஆயிரத்து 563 மதிப்பிலான பொருட்கள் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு ரோந்து படை அமைக்கப்பட்டு உள்ளது. கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்