ஒரே தாழியில் கிடைத்த 74 பவளமணிகள்

கொந்தகையில் நடந்த அகழாய்வில் ஒரே தாழியில் 74 பவளமணிகள் கிடைத்தன.

Update: 2022-08-08 18:24 GMT

திருப்புவனம்,

கொந்தகையில் நடந்த அகழாய்வில் ஒரே தாழியில் 74 பவளமணிகள் கிடைத்தன.

8-ம் கட்ட அகழாய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 8-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

கொந்தகையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற அகழாய்வில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், 20-க்கும் மேற்பட்ட மனித முழு எலும்புக்கூடுகளும் கிடைத்தன.

கடந்த காலங்களில் பொதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்ததில் உள்ளே மனித மண்டை ஓடுகள், விலா எலும்புகள், சிறிய சுடுமண் கிண்ணம், இரும்பிலான வாள், கருப்பு சிவப்பு சிறிய சுடுமண் பானைகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தற்போது 8-ம் கட்ட அகழாய்வின் போது கொந்தகையில் 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 57 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தற்சமயம் முதுமக்கள் தாழியை ஒவ்வொன்றாக திறந்து ஆய்வு செய்கிறார்கள்.

74 பவளமணிகள்

இதை தொடர்ந்து நேற்று கீழடி பிரிவு தொல்லியல் இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் காவியா, அஜய், சுரேஷ் மற்றும் சிலர் முதுமக்கள் தாழி ஒன்றை திறந்து, அதில் உள்ள மண்ணை அகற்றி ஆய்வு செய்தனர். அதில் 74 சூதுபவள மணிகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். தாமிர துகள்களும் கிடைத்துள்ளன.

அதில் கிடைத்த சிவப்பு நிற சூதுபவள மணியின் நீளம் சுமார் ஒரு சென்டிமீட்டர் எனவும், தடிமன் சுமார் 0.6 மில்லி மீட்டர் எனவும் தெரியவருகிறது. இந்த சூதுபவளமணிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது இவை பயன்படுத்தப்பட்ட வருடங்கள், அப்போது வாழ்ந்த மக்கள் பற்றிய விவரங்கள் தெரியவரும். மேலும் ஒரே தாழியில் 74 சூதுபவள மணிகள் எடுக்கப்பட்டுள்ளதால், வசதி படைத்த ஆணோ, பெண்ணையோ அந்த தாழியில் அடக்கம் செய்து இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்