ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி வண்டல் மண் கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் ரூ.80 கோடி அளவில் வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது

Update: 2023-07-04 18:45 GMT

திருக்கோவிலூர்

வண்டல் மண் கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 336 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 379 ஏரிகள் என மொத்தம் 715 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள், குளம், குட்டை மற்றும் ஓடைகளில் இருந்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தேவைக்காக குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரம் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் சில மர்ம நபர்கள் வண்டல் மண்ணை கடத்தி செல்வது, விவசாய பயன்பாட்டுக்கு என்று அனுமதி வாங்கிக்கொண்டு அவற்றை வேறு பயன்பாட்டுக்காக விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதும், இதற்கு காவல் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

அதிகாரிகள் ஆய்வு

இதையறிந்த மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஓடைகளில் எவ்வளவு வண்டல் மண் அள்ளப்பட்டு இருக்கிறது. இந்த மண் அள்ளும் பணி எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களாக நடைபெறுகிறது. எடுக்கப்பட்ட மண்ணின் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்து தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.

இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் மற்றும் ஓடைகளை நேரில் ஆய்வு செய்து அங்கு வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவு, கூடுதலாக எடுக்கப்பட்ட மண்ணின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரு.80 கோடி மதிப்பிலான வண்டல் மண் அள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கலெக்டர் உத்தரவு

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஷ்ரவன்குமார் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எங்கெங்கு வண்டல் மண் கடத்தல் நடைபெற்றுள்ளது, அதில் யார் யாருக்கு தொடர்புஉள்ளது என்பதை அறிந்து அவர்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அதன் விவரத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இந்த வண்டல் மண் கடத்தல் மற்றும் முறைகேடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தவிர இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்